எரிபொருட்களுக்கு மானியம் வழங்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!

எரிபொருட்களுக்கு மானியங்கள் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று(07) தெரிவித்தார்.

ஒரு லீற்றர் டீசலுக்கு அதிகபட்சம் 100 ரூபா வரையான மானியமும்,
பெற்றோல் லீற்றருக்கு அதிகபட்சம் 20 ரூபா வரையான மானியமும் வழங்கப்படவுள்ளது.

எரிபொருட்களின் விலைகள், செலவின் அடிப்படையில் தொடர்ந்து திருத்தப்படும். முதல் விலை திருத்தம் மே மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த மானிய திட்டத்திற்கு மாதாந்தம் சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அதற்காக மூன்று மாதங்களுக்கு 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெற்றோல் முழுமையாக சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். அவற்றைப் பயன்படுத்துபவர்கள் மானியம் எதிர்பார்க்காதவர்களாக இருப்பார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, மீனவர்களுக்கு தனிப்பட்ட உதவி திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் மீனவர்களுக்கு முக்கிய உற்பத்தி செலவாக இருப்பதால் இந்த உதவி வழங்கப்படுவதாக ஜனாதிபதி கூறினார்.

சிறிய மீன்பிடி படகுகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கு, அவர்கள் பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய் பயன்படுத்தினாலும், லீற்றருக்கு 50 ரூபா மானியம் வழங்கப்படும்.

சிறிய மீன்பிடி படகுகளுக்கு தினமும் 25 லீற்றரும்,
மாதத்திற்கு 25 நாட்கள் என
மொத்தம் 625 லீற்றராக வழங்கப்படும்.

இதற்கான மானியம் நேரடியாக மீனவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.

இதனால் படகொன்றிற்கு மாதாந்தம் 31 ஆயிரத்து 250 ரூபாவரை நன்மை கிடைக்கும். இந்த திட்டமும் மூன்று மாதங்களுக்கு அமல்படுத்தப்படும்.

மேலும், பலநாள் மீன்பிடி படகுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை செயல்படும் தன்மையை கருத்தில் கொண்டு,ஒரு இலட்டத்து 50 ஆயிரம் ரூபா வரை எரிபொருள் உதவி தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version