பருத்தித்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்: இந்திய உதவியை நாடியுள்ளோம்: சர்வதேச கடலில் தேடுதலுக்கும் அனுமதி- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு!

யாழ்.பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
குறித்த மீனவர்களை கண்டுபிடிக்க இலங்கை கடற்படையின் உதவியுடனும், ரேடார் கருவிகளின் உதவியுடன் இலங்கைக் கடல் எல்லை பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றுவருகின்றன.
இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த மீனவர்கள் எவரும் தென்படாத நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் ஊடாக இந்திய கடல் எல்லைப் பரப்புக்களில் தேடுவதற்கான உதவியையும் அனுமதியையும் கேட்டுள்ளோம்.
அமைச்சு மட்டத்தில் மீனவர்களை தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்கு கடற்படையின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(30) தீவகக் கடலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்கள் பலத்த காற்றால் திசை மாறி சென்ற நிலையில் உடனடியாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டையடுத்து சில மணித்தியாலங்களில் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.
அந்தவகையில், பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்கள் எமது கடற் பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பில் தேடப்பட்டு வருகிறார்கள்.
அத்துடன் தனியார் படகுகள் மூலம் சர்வதேச கடல் எல்லைகளில் தேடுவதற்கான அனுமதிகளையும் வழங்கியுள்ளோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.




